திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம், குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம், குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ‘வார்தா’ புயல் காரணமாக குடிநீர், மின்சார வினியோகம் முற்றிலும் தடைப்பட்டது

Update: 2016-12-17 22:00 GMT

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம், குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ‘வார்தா’ புயல் காரணமாக குடிநீர், மின்சார வினியோகம் முற்றிலும் தடைப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் செய்யப்படவில்லை.

அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை கூவம் கிராமத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் கிராமத்தில் குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் பண்ணூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடம்பத்தூர்

இதே போல் கடம்பத்தூரில் உள்ள எழில்நகரில் பொதுமக்கள் கடம்பத்தூர்–திருவள்ளூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடம்பத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.

மேலும், வேப்பம்பட்டு பஸ் நிலையம் அருகே அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்