கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி திரளானவர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி திரளானவர்கள் பங்கேற்பு

Update: 2016-12-17 22:45 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலியும் நடந்தது.

சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு மேலமணக்குடி இணை பங்கு தந்தை அருட்பணியாளர் ஜான்பெனிட்டோ தலைமை தாங்கினார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும், மாலை ஆராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை உயர்் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர்பெர்னாண்டோ தலைமை தாங்கினார். அமராவதிவிளை பங்குத் தந்தை அருட்பணியாளர் ஜோசப்ரொமால்டு மறையுரை ஆற்றினார்.

தேர்பவனி

இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவு திருப்பலிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரோமியஸ் தலைமை தாங்குகிறார்், ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன் மறையுரை ஆற்றுகிறார். 8 மணிக்கு ஆங்கிலத் திருப்பலி நடக்கிறது.

விழா ஏற்பாடுகள்

நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி காசாகிளாரட் அருட்பணியாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். பின்னர் 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. 10.30 மணிக்கு நடைபெறும் மலையாள திருப்பலிக்கு திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட நீதித் துறை ஆயர் பதிலாள் அருட்பணியாளர் கிளாடின் தலைமை தாங்குகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு தந்தை நசரேன், பங்குப்பேரவை துணைத்தலைவர் லியோன், செயலாளர் சேவியர்அமலதாஸ், பொருளாளர் மரியஜாண் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்கு அருட் பணியாளர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்