கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

Update: 2017-01-04 23:00 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராமமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களிடம் அத்துமீறல்

அரக்கோணம் தாலுகா நெல்வாய்கண்டிகை கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஒரு பிரிவினர் தங்கள் வீடு களுக்குள் புகுந்து தாக்குகிறார்கள் என்று புகார் கூறினர். பெண்களின் கையைபிடித்து இழுத்து தாக்குகிறார்கள், மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போது பின்னால் சென்று கிண்டல் செய்கிறார்கள் என்று மற்றொரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக பலமுறை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் அவர்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் ஒரு பிரிவினர் எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

கட்சி கொடியுடன் வந்தனர்

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கலெக்டரை சந்தித்து முறையிடுவதற்காக சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் தாமோதரன் தலை மையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் நிறுத்தும் இடத்தின் அருகில் சமாஜ்வாடி கட்சி கொடியுடன் அமர்ந்திருந்தனர்.

இதைப்பார்த்த போலீசார் இங்கு கட்சி கொடியுடன் இருக்கக்கூடாது என்று கூறினர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நின்றிருந்தனர். அவர்களை உள்ளே விடாமல் போலீசார் கேட்டை பூட்டி விட்டனர்.

தள்ளுமுள்ளு

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கேட்டை திறந்துகொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து அங்கு கட்சி கொடியுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் அதை ஏற்க மறுத்து அவர்கள் கலெக்டரை பார்த்தால்தான் போவோம் என்று கூறினர். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது 4 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்