ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் சமூக அமைப்பினர்–மாணவர்கள் கைது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் போராட்டம் நடத்திய சமூக அமைப்பினர், மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டம் தமிழகம், புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவிக்காத பிரதமர் நர

Update: 2017-01-17 22:00 GMT

புதுச்சேரி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் போராட்டம் நடத்திய சமூக அமைப்பினர், மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம், புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை கண்டித்து புதுவையில் சமூக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜா தியேட்டர் சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழக பொதுச்செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வேலுச்சாமி, தமிழர் களம் பிரகாஷ் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கைது

ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கவர்னர் கிரண்பெடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரின் உருப்படங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

கல்லூரி மாணவர்கள்

சட்டக்கல்லூரி மாணவர்கள் தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசாரை கண்டித்தும், கைதான மாணவர்களை விடுவிக்கக்கோரியும் புதுச்சேரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் பீட்டா அமைப்பினை தடை செய்யவேண்டும் என்றும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்