தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சினர் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-30 23:21 GMT
அனுமதி மறுப்பு

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி வழங்க வேண்டும். வீட்டுமனை கோரி விண்ணப்பித்துள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து சிறுபான்மையினருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.சி.ஆறுமுகம் தலைமையில் அந்த கட்சியினர் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அமைந்துள்ள காந்தி சிலை பகுதியில் ஒன்று கூடினர். அங்கு தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

கோ‌ஷங்களை எழுப்பினர்

இந்த நூதன போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் காந்தி சிலையின் அருகே மனுக்களை வைத்து மத்திய–மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில பொதுச் செயலாளர் ஹேமநாதன், மாநில செயலாளர் வையாபுரி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ராபர்ட் கிறிஸ்டி, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் காந்தி நினைவு தினைத்தையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும், மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

மேலும் செய்திகள்