ரன்னிமேடு ரெயில் நிலையத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்

ரன்னிமேடு ரெயில் நிலையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

Update: 2017-02-03 22:00 GMT
கடும் வறட்சி

நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மழைக்காலங்களில் பச்சை பசுமையாகவும், கோடை காலத்தில் வறட்சியின் காரணமாக வறண்டும் காணப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கி உள்ளன.

நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து 3 பெண் யானைகள் உணவு தேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தன.

சுற்றுலா பயணிகள் பீதி

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் இந்த யானைகள் அடிக்கடி உலாவருவதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே உள்ள ஆற்றோரத்தில் முகாமிட்டு இருந்த இந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலியை உடைத்துவிட்டு ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு வந்தன. பின்னர் அங்கு இருந்த தண்ணீரை குடித்த யானைகள், தண்டவாளம் அருகே இருந்த பசுந்தீவனங்களை சாப்பிட்டன. ரன்னிமேடு ரெயில் நிலையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மலைரெயிலுக்காக காத்திருந்த சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைகளை விரட்டினர். இதனால் அந்த யானைகள் தண்டவாளத்தில் நடந்து சென்று அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்