மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை–பணம் கொள்ளை

மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-02-18 21:16 GMT
செங்குன்றம்,

மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்தில் அலுவலகம்

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவன் கார்டன் 4–வது தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டினி(வயது 45). இவர், சென்னை துறைமுகத்தில் சொந்தமாக அலுவலகம் நடத்தி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார். நேற்று காலை குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

27 பவுன் நகை கொள்ளை

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 27 பவுன் தங்க நகைகள், ரூ.24 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

மார்ட்டினி குடும்பத்துடன் சென்னை சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் மாதவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

புழலில் 10 பவுன் திருட்டு

இதேபோல் புழல் மெர்சி நகர் 1–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர், பூ அலங்கார வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மஞ்சுதேவி. இவர், புழலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இரவில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, யாரோ மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி புழல் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்