தவறான உறவை நியாயப்படுத்தும் கணவரோடு சேர்ந்து வாழலாமா?

அவளுக்கு 28 வயது. படித்தவள். ஆனால் ஏழை. நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக் கிறது. குழந்தை இல்லை.

Update: 2017-02-19 11:58 GMT
‘‘ஆண் என்ன தவறு செய்தாலும் அதை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம், என்று சொல்லும் என் கணவர், அவர் இன்னொரு பெண்ணோடு வைத்திருக்கும் தொடர்பையும் நியாயப்படுத்துகிறார்’’ என்றாள், சிந்துஜா.

அவளுக்கு 28 வயது. படித்தவள். ஆனால் ஏழை. நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. குழந்தை இல்லை. அவளது கணவருக்கு 35 வயது. ஏற்றுமதி தொழில் செய்கிறார். பண வசதி மிக்கவர்.

“பெற்றோர் பேசிமுடித்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்கு முன்பே அவர் தனது தொழிலை பற்றியும், பயணம் பற்றியும் என்னிடம் பேசினார். தொழில்    ரீதியாக வெளிநாடுகளுக்கு சென்றால் 10,15 நாட்கள் கழித்துதான் திரும்பி வருவேன் என்றார். அதுபோல் திருமணமான பத்தாவது நாளிலே தனது தொழில் பயணத்தையும் தொடங்கினார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகாலம் அவரது பயணங்களில் எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை..’’ என்றாள்.

‘சந்தேகம் எப்படி, எதனால் வந்தது?’

“வழக்கமாக என் கணவர் அவரது செல்போனை ரொம்ப ரகசியமாக வைத்திருப்பார். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு, திடீரென்று அந்த செல்போனை என் பார்வையில் படும்படி அலட்சியமாக ஆங்காங்கே வைத்து விட்டு செல்லத் தொடங்கினார். அந்த மாற்றத்திற்கான காரணத்தை அறியும் ஆவலில் நான் அவரது செல்போனை எடுத்து நோண்டினேன். அப்போதுதான் பார்க்க சகிக்காத காட்சியை பார்த்தேன்’’ என்றாள்.

செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்தது, படுக்கையறைகாட்சி.

“வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோ ஒரு உயர் ரக ஓட்டல் அறையில் அந்த காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. என் கணவர் முகமும், அந்தபெண்ணின் முகமும் அலங்கோலமான நிலையில் அப்பட்டமாக தெரிந்தது. அதைப் பார்த்துநான் உடல் நடுங்கிப்போய் நின்றிருந்த நேரத்தில், என் கணவர் அருகில் வந்து, ‘நான் நினைத்தது போலவே அதை பார்த்துவிட்டாய். உன்னைப் போன்ற நவீனகால பெண்கள் இதை எல்லாம் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்’’ என்றாள்.

‘சரி அடுத்து என்ன நடந்தது?’

“ஆத்திரத்தில் பேசி, வாக்குவாதம் முற்றிவிடக்கூடாது என்பதற்காக, நான் வீட்டில் இருந்து வெளியேறினேன். என் தாய் வீட்டிற்கு சென்று, அங்கேயே சில மாதங்களாக தங்கியிருந்தேன். ‘இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன். சேர்ந்து வாழலாம் வா’ என்ற அழைப்பு அவரிடமிருந்து வரும் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் என்னோடு பேசவே இல்லை. அவரது குடும்பத்தினரோ, ‘உங்கள் இருவர் பிரச்சினை. நீங்களே பேசி தீர்வு காணுங்கள்’ என்று ஒதுங்கிக்கொண்டார்கள். என் பெற்றோர் தொடர்பு கொண்டபோதும் என் கணவர் பேசவில்லை’’ என்றாள்.

இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று விரும்பிய அவள், திடீரென்று ஒருநாள் கிளம்பி, கணவர் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். ‘கணவர் தன்னைப் பிரிந்த ஏக்கத்தில் இருப்பார். தன்னை வரவேற்று அன்பாக பேசுவார்!’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்திருக்கிறாள்! ‘சிந்தித்துப் பார்த்து என் வாழ்க்கை முறை சரிதான் என்பதை புரிந்து கொண்டாய் என்று நினைக்கிறேன். நீ இனி நிரந்தரமாக என் மனைவியாக இங்கே தங்கியிருக்கலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, நீ இனிமேல் என் செல்போனை தொடக்கூடாது. என்னிடம் சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது’ என்று கூறியிருக்கிறார்.

‘நீ அதற்கு என்ன பதில் சொன்னாய்?’

“எந்த பதிலும் சொல்லவில்லை. எனது தாய் வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. சில வாரங் களாக கணவரது வீட்டில் தான் இருக்கிறேன். ஆனால் என் மனசாட்சி என்னை கொல்கிறது. என்னால் தூங்க முடியவில்லை. சாப்பிட பிடிக்கவில்லை. குற்ற உணர்வே இல்லாமல் என்னையும் படுக்கை அறையில் பயன்படுத்துகிறார். அப்போது நான் புழுவாக துடித்துப்போய் விடுகிறேன். அவரது செயல்பாடு எனது தன்மானத்திற்கே விடப்படும் சவாலாக இருக்கிறது’’ என்று கலங்கினாள்.

அதன் பின்பு அவளது பேச்சு முழுவதும் அழுகை நிறைந்ததாக இருந்தது. தனது அந்தஸ்து–ஆளுமை– கல்வி–திறமை–தன்னம்பிக்கை–பெண்மை போன்ற அனைத்திற்கும் தனது கணவரின் செயல்பாடு அவமானத்தை ஏற்படுத்துவதாகவும், தன்னை ஒரு புழு பூச்சிபோல் கணவர் கருதுவதாகவும் சொன்னாள்.

கணவரிடம் இருந்து முறைப்படி பிரிந்துவிட வேண்டும் என்பது அவள் எண்ணமாக இருந்தது. அதேநேரத்தில் எதிர்காலத்தை பற்றிய பயமும் இருந்தது. கணவரிடம் இருந்து பிரிந்த பின்பு தனது மனநிலை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான நெருக்கடிகள் உருவாகும்? என்பவைகளை எல்லாம் கேட்டாள். அவளது எதிர்காலத்துக்கான திட்டம் வகுக்கப்பட்டது.

பின்பு “இதுவரை எனது கணவரின் ஒழுக்கக்கேடான செயல்பாடு பற்றியோ, நான் பிரிந்து போகவிரும்புவது பற்றியோ என் பெற்றோரிடம் பேசவில்லை. சரியாகக் கூடிய சின்னச்சின்ன சச்சரவுகள்தான் எங்களுக்குள் ஏற்பட்டிருப்பதாக என் பெற்றோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எனது விவாகரத்து முடிவை எப்படி சொல்வது என்று தெரியவில்லை’’ என்றாள்.

அவளது பெற்றோரை அழைத்து பேசியபோது, மகளின் வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். “இப்படிப்பட்ட ஒருவனோடு வாழ வேண்டியதில்லை. உன்னாலும் வாழ்ந்துகாட்ட முடியும். விவாகரத்து பெற்று விடு’’ என்று மகளுக்கு தன்னம்பிக்கையூட்டினார்கள்.

பெண்களுக்கு சுயமரியாதை முக்கியம். தன்மானத்தை இழந்துவிட்டு, தங்க
கூண்டுக்குள் வாழ பெண்கள் விரும்புவதில்லை. ஆண்கள், தங்கள் ஒழுக்கக்கேடுகளை மறைப்பதற்காக ஏழை பெண்களின் வாழ்க்கையை பலியாக்கக்கூடாது.

 –விஜயலட்சுமி பந்தையன்.

மேலும் செய்திகள்