சென்னையில் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் தடுப்பில் மோதி கீழே விழுந்த தொழிலாளி பலி: நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-02-19 23:15 GMT
ராமசாமி அய்யர் மேம்பாலம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி அய்யர் மேம்பாலம் டி.டி.கே. சாலையையும், வெங்கடகிருஷ்ணன் சாலையையும் இணைக்கிறது. ஆபத்தான மேம்பாலமாக இது இருப்பதால், மேம்பாலத்தில் வேகமாக செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணியளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டிருந்தன. அப்போது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. ‘ஆயுத எழுத்து’ சினிமா காட்சிபோல ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பேர் ‘அய்யோ... அம்மா...’ என்று கூச்சலிட்டபடியே பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

ஒருவர் பலி

அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் 40 அடி உயரத்தில் இருந்து 2 பேர் மின்னல் வேகத்தில் கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கீழே விழுந்த ஒருவரது தலை தரையில் மோதிய வேகத்தில் சிதைந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இன்னொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியானவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேம்பாலத்தில் மோதியது

இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

சென்னை மந்தைவெளி ராஜாமுத்தையாபுரத்தை சேர்ந்தவர் சிவா என்கிற சிவசண்முகம் (வயது 39). ‘வெல்டிங்’ தொழிலாளி. இவரது நெருங்கிய நண்பர் ஸ்டீபன் (35). இவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சிவசண்முகமும், ஸ்டீபனும் நேற்று நண்பர்களை பார்ப்பதற்காக ஆழ்வார்பேட்டை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை ஸ்டீபன் ஓட்டினார். ராமசாமி அய்யர் மேம்பாலத்தில் வேகமாக சென்ற அவர்கள் பாலத்தின் வளைவில் திரும்பியபோது, மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைக்க முடியாமல் பாலத்தின் தடுப்பில் மோதியுள்ளனர். எதிர்பாராத இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த சிவசண்முகமும், ஸ்டீபனும் பாலத்தில் இருந்து கீழே தூக்கிவீசப்பட்டனர்.

வாகனம் ஏதும் மோதியதா?

இதில் சிவசண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ஸ்டீபன் படுகாயத்துடன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மேம்பாலத்திலேயே விழுந்துகிடந்தது. அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி உள்ளோம்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மேம்பாலத்தில் மோதியதால் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. அதேநேரம் வேறு வாகனங்கள் எதுவும் உரசியதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேம்பாலங்களில் ஆபத்தை உணர்ந்து மெதுவாக பயணித்தாலே இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கேபிள் வயர்களை பிடித்துக்கொண்டு கீழே விழுந்ததால் உயிர்தப்பினார் காயமடைந்தவர் பற்றி நேரில் பார்த்தவர்கள் தகவல்

நேரில் பார்த்தவர்கள்

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் நடந்த விபத்தில் சிக்கி சிவசண்முகம் என்பவர் இறந்தார். அவரது நண்பர் வங்கி ஊழியரான ஸ்டீபன் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைத்தது எப்படி? என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாவது:-

நாங்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மேம்பாலத்தில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே நாங்கள் மேலே பார்த்தபோது மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஒரு நபர் வேகமாக தரையில் மோதி அங்கேயே இறந்துவிட்டார்.

கேபிள் வயர்கள்


இன்னொருவர் மேலே இருந்து விழுந்த வேகத்தில் அந்த பகுதியில் உள்ள கேபிள் வயர்களில் சிக்கியபடி கீழே விழுந்தார். அவர் கையில் சிக்கிய கேபிள் வயர்களை பிடித்தபடியே தரையை நோக்கி மெதுவாக விழுந்து 2 முறை உருண்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். கேபிள் வயர்களை பிடிக்காமல் இருந்தால் அவரும் தரையில் வேகமாக மோதி இறந்திருப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமசாமி அய்யர் மேம்பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல ஒரு விபத்து நடந்துள்ளது. ஜீப்பில் வந்த ஒரு நபர் மேம்பால வளைவில் தடுப்பில் மோதி தூக்கிவீசப்பட்டார். இதில் அந்த நபர் பாலத்தில் இருந்து கீழே சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து படுகாயம் அடைந்தார்.

மேலும் செய்திகள்