பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-02-23 22:19 GMT

புதுச்சேரி,

கஞ்சா விற்பனை

புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் செஞ்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முத்தியால்பேட்டை குட்டி கிராமிய தெருவை சேர்ந்த ஜோசப் அமலநாதன் என்பவரது மகன் சார்லஸ் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

மேலும் 3 பேர் கைது

விழுப்புரத்தை சேர்ந்த அய்யனார்(47), பவானி (48), குமரகுரு(38) ஆகியோரிடம் இருந்து சார்லஸ், கஞ்சாவை வாங்கி பொட்டலமாக தயாரித்து புதுவையில் பல இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பெரியகடை போலீசார் விழுப்புரம் சென்று அய்யனார், பவானி, குமரகுரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.1500 ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் சேலத்தில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீசில் தெரிவித்தனர். கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீசாருக்கு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்