பொருளாதார அடிப்படையில் ரே‌ஷன்கார்டுதாரர்களை பிரிக்கும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும்

இளையான்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன்

Update: 2017-02-27 22:15 GMT

இளையான்குடி

இளையான்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ரே‌ஷன் கார்டுகள் கணக்கெடுக்கும் பணியில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது. பொருளாதார அடிப்படையில் ரே‌ஷன் கார்டுகளை முன்னுரிமை உள்ள ரே‌ஷன் கார்டுகள், முன்னுரிமையற்ற ரே‌ஷன் கார்டுகள் என இரு பிரிவுகளாக பிரித்துள்ளனர். இதனைதொடர்ந்து ஒரே ரே‌ஷன்கடையில் பாதிக்கும் மேற்பட்ட கார்டுகள் முன்னுரிமையற்ற கார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களின் ரே‌ஷன் கார்டுகள் முன்னுரிமையற்ற ரே‌ஷன் கார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுபோன்ற நபர்கள் எதிர்காலத்தில் ரே‌ஷன் பொருட்கள் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இளையான்குடி ஒன்றிய பகுதியில் ஏழை மக்களை முறையாக கண்டறிந்து ரே‌ஷன் கார்டுகளை பிரிப்பது சம்பந்தமான பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்