ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.57½ கோடி நிவாரணத்தை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

Update: 2017-03-07 23:00 GMT
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.தென்னரசு, எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் வரவேற்று பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்திற்கான உத்தரவை வழங்கி பேசினார்கள்.

ரூ.83½ கோடி

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:–

மற்ற மாநிலங்களில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு மட்டுமே நிவாரண பணிகள் நடந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தான் முதன்முதலாக வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 472 கோடியை வறட்சி நிவாரணமாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் விவசாயிகளின் தரத்தை உயர்த்த பல்வேறு சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி கணக்கில்...

ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 931 விவசாயிகளுக்கு ரூ.83 கோடியே 56 லட்சம் வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக விவசாயிகளுக்கு ரூ.57 கோடியே 59 லட்சம் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.

இதில் ஈரோடு தாலுகாவில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 33 லட்சமும், மொடக்குறிச்சி தாலுகா விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 50 லட்சமும், கொடுமுடி தாலுகா விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 60 லட்சமும், பெருந்துறை தாலுகா விவசாயிகளுக்கு ரூ.9 கோடியே 20 லட்சமும், பவானி தாலுகா விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சமும் வழங்கப்பட்டது. இதேபோல் அந்தியூர் தாலுகா விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 90 லட்சமும், கோபிசெட்டிபாளையம் தாலுகா விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 96 லட்சமும், சத்தியமங்கலம் தாலுகா விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 2 லட்சமும், தாளவாடி தாலுகா விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 6 லட்சமும் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கும் பணி முடிந்த பிறகு வறட்சி நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

மாணவ–மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

விழாவில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவ–மாணவிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஊக்கத்தொகையும், 15 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டது.

விழாவில் ஈரோடு செல்வகுமார சின்னையன் எம்.பி., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அய்யண்ணன், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்துரவிச்சந்திரன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, முன்னாள் மண்டல தலைவர் மனோகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் ஈரோடு வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஆர்.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்