பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு உதவி இயக்குனர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு உதவி இயக்குனர் தகவல்

Update: 2017-03-08 22:15 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.5¼ லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளதாக பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் எஸ்.ஜெயபிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

பயிர் பாதுகாப்பு திட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 515 ஏக்கர் நிலப்பரப்பில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 1,612 விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நோய் தாக்குதல் காரணமாக பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன்மூலம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு பட்டு வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் எஸ்.ஜெயபிரகாஷ் கூறியதாவது:-

பட்டுப்புழு வளர்ப்பில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சாணம், புரோட்டாசோவா போன்ற நுண்கிருமிகள் மூலம் நோய் தாக்கப்படுவது பெரும் சவாலாக உள்ளது. இருந்தாலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டுப்புழுக்கள் சுகாதாரமான முறையில் வளர்க்கப்படுகிறது.

10 சதவீதம் தவணைத்தொகை

தட்பவெப்பநிலை காரணமாக எதிர்பாராதவிதமாக புழுவில் நோய் தாக்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பயிர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விபத்து அல்லது இயற்கை சீற்றத்தினால் பட்டுப்புழு வளர்ப்பு மனை பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் இழப்பீடும், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அல்லது குடும்பத்தினர் விபத்தில் படுகாயமோ, மரணமோ அடைந்தால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்கப்படுகிறது.

யுனைடெட் இந்தியா காப்பீடு என்ற பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 100 முட்டை தொகுதி வெண்பட்டு வளர்ப்பிற்கு தவணை தொகையாக ரூ.188-ம், மஞ்சள் பட்டு வளர்ப்பிற்கு தவணை தொகையாக ரூ.168-ம் வசூலிக்கப்படுகிறது. இதில் 10 சதவீதம் மட்டும் விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது. அதாவது வெண்பட்டு வளர்ப்பிற்கு 18 ரூபாய் 80 காசும், மஞ்சள்பட்டு வளர்ப்பிற்கு 16 ரூபாய் 80 காசும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள 90 சதவீத தவணை தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்திவிடும்.

1,310 விவசாயிகள்

ஈரோடு மாவட்டத்தில் 1,310 விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து உள்ளனர். இதில் முதற்கட்டமாக பட்டுப்புழு வளர்ப்பு மனை பாதிக்கப்பட்ட 3 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 248-ம், பட்டுப்புழு வளர்ப்பில் நஷ்டம் அடைந்த 28 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 611 என மொத்தம் ரூ.5 லட்சத்து 31 ஆயிரத்து 859 இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 28 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு உதவி இயக்குனர் எஸ்.ஜெயபிரகாஷ் கூறினார். 

மேலும் செய்திகள்