ரிசர்வ் பட்டாலியன் பயிற்சி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ரிசர்வ் பட்டாலியன் பயிற்சி மையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட இடத்தை போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-03-08 22:30 GMT

பாகூர்,

நரம்பை கிராமத்தையொட்டி புதுச்சேரி மாநில ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் படை பயிற்சி மையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் நேற்றுக் காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பயிற்சி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நரம்பை கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பயிற்சி மையம் அமைக்க

புதுச்சேரி மாநிலம் நரம்பை மீனவ கிராமத்துக்கும், பிள்ளையார்குப்பத்துக்கும் இடையே காலி இடம் உள்ளது. அதில் 94 ஏக்கர் பரப்பளவு பகுதி புதுச்சேரியில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் படையின் பயிற்சி மையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டது.

இங்கு பயிற்சி மையம் அமைப்பதற்கு நரம்பை மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பயிற்சி மையத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புக்காக அந்த இடத்தில் தினமும் ரிசர்வ் பட்டாலியன் போலீசார் 2 பேர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு

இந்த நிலையில் புதுச்சேரி மாநில போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், நேற்றுக் காலை அந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் படை துணை கமாண்டர் குருராஜ், தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டும் ரகீம் ஆகியோரும், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் உடன் வந்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

அவர்களுடன் போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் ஆலோசனை நடத்தி அந்த இடத்தில் முள்வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தார்.

ஆர்ப்பாட்டம்

போலீஸ் டி.ஜி.பி. வந்து பயிற்சி மையம் அமைய உள்ள இடத்தை பார்வையிடுவது பற்றிய தகவல் அறிந்ததும் நரம்பை மீனவ கிராம மக்கள் ஊர் தலைவர் செல்வநாதன் தலைமையில் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் டி.ஜி.பியிடம் அந்த இடத்தில் பயிற்சி மையம் அமைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அது தொடர்பாக ஏற்கனவே பலமுறை அரசுக்கு மனு அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனைக் கேட்டுக்கொண்ட போலீஸ் டி.ஜி.பி., அவர்களிடம் இது தொடர்பாக தனது அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி அவர்களிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

ஆனால் அவருடைய இந்த பதிலை ஏற்க மறுத்த மீனவ கிராம மக்கள் நரம்பை கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்