பூந்தமல்லியில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது 45 பவுன் நகை பறிமுதல்

பூந்தமல்லியில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-03-21 23:14 GMT

பூந்தமல்லி,

சென்னையில் சமீபகாலமாக சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருந்து தங்க நகைகளை பறித்து செல்வதை மர்ம நபர்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இதே போன்று சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்துவருகின்றன.

சங்கிலி பறிப்பில் ஈடுபடக்கூடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

முன்னுக்குப்பின் முரணாக...

பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிவாக்கம் செல்லும் சாலையில் பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

45 பவுன் நகை

விசாரணையில் அவர் பூந்தமல்லி, கண்டோன்மெண்ட்டை சேர்ந்த ஜான்பாட்ஷா என்ற அன்பரசு(28) என்பதும், அவர் பூந்தமல்லி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜான்பாட்ஷாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 45 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும், சென்னையின் மற்ற பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஜான்பாட்ஷாவிற்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்