வாலிபரிடம் நகை, செல்போன் பறித்த 3 பேர் கைது முகநூல் நண்பர் கூட்டாளிகளுடன் கைவரிசை

ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகரை சேர்ந்தவர் ஷியாம் சூர்யா (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Update: 2017-03-22 22:00 GMT

ஆவடி,

திருநின்றவூர் தேவி நகர் முதல் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (23). தனியார் நிறுவன ஊழியர்.

இருவரும் ஒரு மாதத்துக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள். 18–ந் தேதி இரவு ஜெயக்குமார், ஷியாம் சூர்யாவுக்கு போன் செய்து தனது நண்பரை பார்க்க அழைத்துள்ளார். இதனால் ஷியாம் சூர்யா, ஆவடி பஸ் நிலையம் அருகே சென்றார்.

அப்போது அவரை, ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளில் ஆவடியில் வசிக்கும் தன் நண்பர் ரவீந்திரன் (25) வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆவடியில் உள்ள மத்திய அரசு கனரக வாகன தொழிற்சாலையில் ரவீந்திரன் வேலை செய்கிறார். அங்கு ஜெயக்குமாரின் மற்றொரு நண்பர் திருநின்றவூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முகமது காசிம் (27) இருந்தார்.

திடீரென ஜெயக்குமார், ரவீந்திரன், முகமது காசிம் ஆகியோர் ஷியாம் சூர்யாவை தாக்கி அவரிடம் இருந்து நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு துரத்தி விட்டனர்.

இது குறித்து ஷியாம் சூர்யா, ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்–இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் வழக்குப்பதிந்து ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்