மின்சார ரெயிலில் மாடு அடிபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் மாடு அடிபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2017-03-26 21:45 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று மதியம் 2 மணியளவில் மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதியது.

ரெயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்த மாடு, அதே இடத்தில் பரிதாபமாக செத்தது. மாடு மீது ரெயில் மோதிய வேகத்தில் ரெயில் பெட்டிகள் குலுங்கியதால் ரெயில் தடம் புரண்டு விட்டதா? என பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பலியான மாட்டின் உடல் ரெயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் மேற்கொண்டு ரெயில் நகர முடியாமல் நின்று விட்டது. இதனால் தாம்பரம்–சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழவந்தாங்கல், மீனம்பாக்கம் ரெயில் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், ரெயிலுக்கு அடியில் சிக்கிய மாட்டின் உடலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரெயிலை முன்னும், பின்னுமாக நகர்த்தி சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு ரெயிலுக்கு அடியில் சிக்கிய மாட்டின் உடல் அகற்றப்பட்டது. இதையடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு தாம்பரம்–கடற்கரை இடையே மின்சார ரெயில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்