முதன்மை கல்வி அலுவலரின் மகள்: 10–ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவியின் மாற்றுத்திறன் தன்மையில் சந்தேகம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு

10–ம் வகுப்பு தேர்வை எழுதும் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் மகளின் மாற்றுத்திறன் தன்மையில் சந்தேகம் ஏற்பட்டது.

Update: 2017-03-27 23:00 GMT

தர்மபுரி

மாற்றுத்திறனாளி

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவருடைய மகள் சங்கமப்பிரியா (வயது 15). இவர் இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய வலது கை நரம்பில் சிறு வயதிலேயே பாதிப்பு ஏற்பட்டது. இயற்கையாக வலது கை பழக்கம் உள்ளவரான சங்கமப்பிரியா அந்த கையை இயல்பாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இடது கையில் 10–ம் வகுப்பு தேர்வை எழுத முடிவு செய்தார்.

இதுதொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர், மாணவி சங்கமப்பிரியாவின் கைகள் செயல்பாட்டை ஆய்வு செய்து 10–ம் வகுப்பு தேர்வை எழுத அவருக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து சங்கமப்பிரியாவிற்கு 10–ம் வகுப்பு தேர்வு எழுதும்போது கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் 10–ம் வகுப்பு தேர்வை எழுதி வந்தார்.

நோட்டீஸ்

இந்த நிலையில் கடந்த 23–ந்தேதி சங்கமப்பிரியாவின் வீட்டு முகவரிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாமிநாதன், ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில் சங்கமப்பிரியாவின் வலது கை செயல்பாட்டு இயலாமை குறித்து மறு ஆய்வு நடத்த மறுநாள் (24–ந்தேதி) ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் வழங்கப்பட்ட இந்த நோட்டீசால் அதிர்ச்சி அடைந்த மாணவி சங்கமப்பிரியா, இதுதொடர்பாக சைல்டு லைன் அமைப்பில் புகார் செய்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக மாணவி சங்கமப்பிரியா தர்மபுரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

எனது வலது கையை சரியாக இயக்க முடியாததால் டாக்டரின் ஆய்வு மூலம் எனக்கு மாற்றுதிறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்படி எனக்கு இடது கை மூலம் 10–ம் வகுப்பு தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் ஆய்வு நடத்திய சிலர், நான் தேர்வு எழுதுவதை படம் பிடித்தனர்.

மன உளைச்சல்

கடந்த 24–ந்தேதி மருத்துவ ஆய்வுக்கு ஆஜராகுமாறு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் அனுப்பிய நோட்டீசை ஊழியர்கள் சிலர் எனது வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. தேர்வை முழுமையான கவனத்துடன் எழுத முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரியும் எனது தாயாருக்கும் நிர்வாக ரீதியாக பிரச்சினை உள்ளது. இதனால் உள்நோக்கத்தோடு எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்தேகம்

இதுதொடர்பாக தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:–

அரசு பொதுத்தேர்வு நடைபெறும் போது வருவாய்த்துறை மூலம் சில பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 10–ம் வகுப்பு தேர்வு நடைபெற்ற மையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தியபோது மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் நேரம் பெற்று தேர்வு எழுதியவர்களில் ஒரு மாணவியின் மாற்றுத்திறனாளி தன்மை குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய உதவி கலெக்டர் ராமமூர்த்தி, எனக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் சம்பந்தப்பட்ட மாணவி 40 சதவீத மாற்றுத்திறனாளி தன்மை உடையவரா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த பரிந்துரை செய்தார். இந்த அறிக்கை தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது.

வழக்கமான நடைமுறை

சம்பந்தப்பட்ட மாணவியின் மாற்றுத்திறனாளி தன்மையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு உரிய தெளிவை பெற உரிய ஆய்வை நடத்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பப்பட்டது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறை. இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாணவி முதன்மை கல்வி அலுவலரின் மகள் என்பது எனக்கு முதலில் தெரியாது. ஆனால் விசாரணை என்று வந்து விட்டால் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்ட முடியாது.

விதிமுறைகளின் படியே செயல்பட முடியும். சம்பந்தப்பட்ட மாணவி தேர்வு எழுதுவதை பாதிக்காத வகையில் இந்த ஆய்வை நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்வுத்துறை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மறு ஆய்வு

10–ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி சங்கமப்பிரியாவின் மாற்றுத்திறனாளி தன்மை தொடர்பாக உதவி கலெக்டர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அந்த மாணவியின் மாற்றுத்திறனாளி தன்மையை மறு ஆய்வுக்கு உட்படுத்த எனக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பான ஆய்வுக்கு 24–ந்தேதி ஆஜராகும்படி மாணவியின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் 24–ந்தேதி அந்த மாணவி ஆஜராகவில்லை.

சங்கமப்பிரியாவிற்கு ஏற்கனவே ஒரு டாக்டர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த மாணவியின் மாற்றுத்திறனாளி தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தலைமை மருத்துவ குழுவிற்கு அனுப்பி 3 டாக்டர்கள் கொண்ட குழு மூலம் மாற்றுத்திறன் தன்மை குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது:–

மனித உரிமை ஆணையம்

எனது மகளுக்கு முறையான மருத்துவ ஆய்வின் மூலமாகவே மாற்றுத்திறன் தன்மை கண்டறியப்பட்டு 10–ம் வகுப்பு தேர்வில் கூடுதல் நேரம் தேர்வு விதிமுறைகளின்படி வழங்கப்பட்டது. மாற்றுத்திறன் சதவீதம் குறித்து சான்றிதழ் வழங்கப்பட்டதில் தவறு இருந்தால் அது தொடர்பாக ஆய்வின் மூலம் கண்டறிந்து தேர்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகத்தின் தலையீடு, தேர்வு நேரத்தில் எனது மகளின் கவனத்தையும், மனதையும் பாதித்து உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக மனித உரிமை ஆணையத்தை நாடப்போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்