இலவச வீடுகள் கேட்டு கைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் 120 பேர் கைது

இலவச வீடுகள் கட்டித் தர வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி தொழிலாளர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-30 23:00 GMT
புதுச்சேரி,

தனியாரிடம் துணிகளை கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு இலவச துணிகள் வழங்குவதை அரசு கைவிட வேண்டும், கைத்தறி, சட்டத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் இலவச வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே அவர்கள் நேற்று காலை ஒன்று கூடினர். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். சங்க தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் அபிஷேகம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் மோகன்தாஸ், அந்தோணி, காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறியல்; 120 பேர் கைது


ஊர்வலம் காந்திவீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றது. அஜந்தா சந்திப்பு அருகே வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அங்கு திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் 70 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் போக்குவரத்து சீரானது. கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்