மகளை கோடரியால் தாக்கி கொலை செய்த தந்தை கைது

வேறு சாதி வாலிபரை காதலித்து திருமணம் செய்ததால், பெற்ற மகளையே கோடரியால் தாக்கி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-06 20:57 GMT

புல்தானா,

புல்தானா அருகே வேறு சாதி வாலிபரை காதலித்து திருமணம் செய்ததால், பெற்ற மகளையே கோடரியால் தாக்கி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மருந்து விற்பனை பிரதிநிதி

புல்தானா மாவட்டம் நிம்கேடா கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் மனிஷா (வயது 21). இவரும் இதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். கணேஷ் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் மனிஷாவின் தந்தை பாலுவுக்கு தெரியவந்தது.

இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு பாலு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மனிஷாவுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய சம்பந்தம் பேசினார். அத்துடன் வருகிற 20–ந் தேதி திருமணம் என்று நாள் குறித்தார். இதனால், கலக்கம் அடைந்த மனிஷா, இதுபற்றி தன்னுடைய காதலனிடம் தெரியப்படுத்தினார்.

வீட்டை விட்டு வெளியேறி...

இதைத்தொடர்ந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 23–ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், புல்தானாவில் உள்ள மல்காபூரில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்– மனைவியாக வசித்தனர். சில நாட்கள் கழிந்ததும், நடந்ததை மறந்து இருவீட்டாரும் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற மனநிலையில், இருவரும் நிம்கேடா கிராமத்துக்கு வந்தனர்.

அதன்படி, கணேசின் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தினர். இந்த நிலையில், சம்பவத்தன்று கணேஷ் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் மனிஷா மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவரது தந்தை பாலு அங்கே வந்தார்.

கொலை

தன்னுடைய தந்தை தன்னை பாசத்துடன் பார்க்க வந்திருக்கிறார் என்ற எண்ணிய மனிஷா, அவரை வீட்டுக்குள் அழைத்தார். இந்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கோடரியால், மனிஷாவை பலமாக தாக்கி விட்டு பாலு சென்றுவிட்டார். இதனால், பலத்த காயம் அடைந்த மனிஷா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய கணேஷ், மனைவி குற்றுயிரும், குலையுயிருமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர், கண்ணீரும், கம்பலையுமாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இருப்பினும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மனிஷாவின் உயிர் பிரிந்தது.

போலீசில் சரண்

இதனிடையே, நடந்த சம்பவத்தை கூறி உள்ளூர் போலீசில் பாலு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தன் விருப்பத்துக்கு மாறாக வேறு சாதி வாலிபரை காதலித்து திருமணம் செய்ததால் பெற்ற மகளையே தந்தை கோடரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்