ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.29 கோடி செலவில் 100 அறைகளுடன் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் அறநிலையத்துறை அதிகாரி தகவல்

ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 100 அறைகளுடன்

Update: 2017-04-16 23:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு நேற்று தமிழக இந்து அறநிலையத் துறை ஆணையாளர் வீரசண்முகமணி வந்தார். அவர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களுக்கு சென்று, பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார். அதன்பின்பு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் எனப்படும் பக்தர்கள் தங்கும் விடுதியின் கட்டிட பணிகளையும், கட்டிட வரை படத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம், கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் ஆகியோர் யாத்ரி நிவாஸ் கட்டிடத்தில் அமையவுள்ள பல்வேறு வசதிகள் குறித்து விளக்கி கூறினர்.

அதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஆணையாளர் கூறியதாவது:– ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் யாத்ரிநிவாஸ் என்ற மிகப்பெரிய தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதி கட்ட ராமேசுவரம் கோவில் நிதியில் இருந்து ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டு, பொதுப் பணித்துறையினரால் கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஒரு வருடத்தில்

இதில் பக்தர்கள் தங்குவதற்காக 100 அறைகள், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ரத வீதிகளில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு வசதியாக, கோவில் சார்பில் 3 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 10 பேட்டரி கார்கள் வாங்கப்பட்டு விரைவில் பக்தர்கள் வசதிக்காக விடப்பட உள்ளது.

கோவிலுக்குள் நடைபெறும் திருட்டு, முறைகேடுகளை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என சென்னையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட உள்ளது. புதிய கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டதும், பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக வடக்கு, தெற்கு கோபுர வாசல்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ண, நேர்முக உதவியாளர் கமலநாதன் உள்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்