சாலையின் நடுவே நடந்து சென்றதால் தகராறு: தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவர் கொலை

காருக்கு வழி விடாமல் சாலையின் நடுவே நடந்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவரை கொலை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-23 23:15 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் இந்திரா தெருவைச் சேர்ந்தவர் குமார்(வயது 25). டிரைவரான இவர், சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவர், நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து காரில் வீட்டுக்கு சென்றார்.

பெருங்குடி கல்லுக்குட்டை அருகே வந்தபோது 3 பேர் சாலையின் நடுவே நடந்து சென்றனர். இதனால் டிரைவர் குமார், அவர்களை வழிவிட கூறி காரின் ‘ஹாரனை’ அடித்தார். ஆனால் அவர்கள் குடிபோதையில் இருந்ததால், காருக்கு வழி விடாமல் தொடர்ந்து சாலையின் நடுவே நடந்து சென்றனர்.

தலையில் கல்லைப்போட்டு கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த குமார், காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கிச்சென்று 3 பேரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து டிரைவர் குமாரை அடித்து உதைத்து கீழே தள்ளினர்.

பின்னர் அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி, குமாரின் தலையில் போட்டனர். இதில் படுகாயமடைந்த குமார், வலியால் அலறி துடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

3 பேர் கைது

இது குறித்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் மெக்கிபூர் கிராமத்தை சேர்ந்த கோபி(23), புதுச்சேரி ரவுத்தன் குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மணி(27) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

வெவ்வேறு ஊர்களை சேர்ந்த இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் ஒன்றாக தங்கி இருந்து கோபி லோடு மேனாகவும், மணிகண்டன் கட்டிட வேலையும், மாரிமுத்து தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்