எம்.பி. மகனின் காருக்கு அனுமதி மறுப்பு சுங்கச்சாவடியை சூறையாடிய எம்.பி.யின் ஆதரவாளர்கள் 7 பேர் கைது

பாகேபள்ளியில் ஆந்திர எம்.பி. மகனின் காருக்கு அனுமதி மறுத்ததால் சுங்கச்சாவடியை எம்.பி.யின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-24 23:15 GMT

கோலார் தங்கவயல்,

ஆந்திர மாநிலம் இந்துப்பூர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் நிம்மல கிருஷ்ணப்பா. இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இவருடைய மகன் அம்பரீஷ் (வயது 30). இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான 2 காரில் தனது நண்பர்களுடன் இந்துப்பூரில் இருந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி வழியாக பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பாகேபள்ளி அருகே பாகேபள்ளி–பெங்களூரு சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வந்தபோது, சுங்கச்சாவடி ஊழியர் எம்.பி. மகனிடம் சுங்கக்கட்டணம் கேட்டுள்ளார்.

ஆனால், தான் எம்.பி.யின் மகன் என்று மத்திய அரசின் பாசை காண்பித்துள்ளார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் அம்பரீஷ் சென்ற காரை மட்டும் அனுமதித்தார். ஆனால் அவருடைய மற்றொரு காரை ஊழியர் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

சுங்கச்சாவடி சூறை

இதனால் ஆத்திரமடைந்த அம்பரீஷ், தனது தந்தையின் ஆதரவாளர்களுக்கு போன் செய்து வரவழைத்தார். சிறிது நேரத்தில் எம்.பி.யின் ஆதரவாளர்கள் 20 பேர் அங்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள், திடீரென்று சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கிருந்த கம்ப்யூட்டர்களையும் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடியின் மேலாளர் உதயகுமார் சிங், பாகேபள்ளி போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

7 பேர் கைது

இதுகுறித்து பாகேபள்ளி போலீசார் ஆந்திர எம்.பி.யின் மகன் அம்பரீஷ் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர எம்.பி.யின் மகனின் காரை சுங்கச்சாவடி ஊழியர் அனுமதிக்க மறுத்ததால், அவருடைய ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியை சூறையாடிய சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்