குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நாமக்கல் மாவட்ட பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-04-29 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் மாநில செயலாளர் அனு சந்திரமவுலி, சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் ஆசிம் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

தீர்மானங்கள்


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டதால், விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்டது. தற்போது விரிவாக்க பணி முடிவடைந்த நிலையில், சாலை ஓரங்களில் புதிய மரக்கன்றுகள் நடுவதற்கு மாநில அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாயக்கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து, குடிநீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்