முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2017-04-29 23:00 GMT

மதுரை,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

 கரூர் மாவட்டம் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக 2015–ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. 1.3.2016 அன்று கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதற்காக சிறப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, குப்புச்சிப்பாளையத்தில் இருந்து சாணப்பிராட்டி என்ற கிராமத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை மாற்றுவதற்கு சிறப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அரசு மருத்துவமனை கட்டுவதற்கு நிலம் அளித்த கொடையாளர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு புதிய மனுவை கரூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் அளிக்க வேண்டும். அந்த மனுவை போலீசார் பரிசீலித்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்