அராஜகத்தால் எதையும் சாதிக்க முடியாது: பாதிக்கப்பட்டவர்களுக்காக காங்கிரஸ் துணை நிற்கும்

அராஜகத்தால் எதையும் சாதித்து விட முடியாது. கட்சியினருக்கு பாதிப்பு என்றால் அவர்களுக்காக காங்கிரஸ் துணை நிற்கும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-05-03 23:15 GMT
பாகூர்

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது45). முன்னாள் கவுன்சிலர். தொகுதி காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார். கடந்த மாதம் ரெட்டிச்சாவடி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வீரப்பனின் உருவப்படம் திறப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி பிள்ளையார்குப்பத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். வீரப்பனின் படத்தை திறந்து வைத்து, அவரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிதி உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில், நாராயணசாமி பேசியதாவது;-

துணை நிற்போம்

அராஜகத்தால் எந்த காரியத்தையும் சாதித்து விட முடியாது. ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் வன்முறையை தூண்டி வருகின்றனர். அமைச்சர் கந்தசாமியின் வெற்றிக்கு அவரின் மக்கள் பணி தான் காரணம். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் வீரப்பன். மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படக் கூடியவர். அவரின் இழப்பு பிள்ளையார்குப்பத்திற்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் இழப்பு தான். கொலை சம்பவத்தை தமிழக பகுதியில் நடத்தினால், தப்பித்து விடலாம் என்று நினைக்கின்றனர் வீரப்பனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் விட்டு விடக் கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர், தலைமை செயலர், காவல் துறை அதிகாரியிடம், காங்கிரஸ் கட்சி மற்றும் அரசின் சார்பில் வலியுறுத்துவோம். காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணையாக நிற்கும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

வன்முறை தீர்வாகாது

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், ‘கடந்த ஒரு மாதத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்கு, வன்முறை தீர்வாகாது. அமைதி காக்க வேண்டும். வீரப்பன் இழப்பு ஈடு செய்ய முடியாதது. காவல் துறை அதிகாரிகள், வீரப்பன் கொலை வழக்கு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’ என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் நீலகங்காதரன், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் இளையராஜா, மாநில, தொகுதி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்