கல்லட்டி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: 6 பேர் படுகாயம்

ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார்கவிழந்து விபத்துள்ளானது. இதில் கும்பகோணத்தை சார்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-05-30 21:45 GMT

மசினகுடி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் கல்லட்டி மலைப்பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த பாதையில் வாகனங்களை மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும். குறிப்பாக முதலாவது மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கபட்டுள்ளன. இருப்பினும் சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டை இழந்தது

இந்த நிலையில் கும்பகோணத்தை சார்ந்த ராஜசேகரன் (வயது 45) என்பவர் தனது மனைவி செந்தாமரை(38), மகன் கார்த்திக்(7), உறவினர்கள் ஜான்(35), கிருஷ்ணவேனி(39), ரகுவரன்(28) ஆகியோர்களுடன் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு விஷேசத்துக்காக வந்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை திருப்பூரிலிருந்து ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலைக்கு சென்றுள்ளனர். கார் கல்லட்டிமலைப்பாதையில் உள்ள 34–வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்தது.

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

இதனால் மலைப்பாதையில் சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி, உடனே 6 பேரையும் மீட்டு உடனடியாக ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 6 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 6 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதுமந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்