தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் 3–வது இடம்

தமிழகத்திலேயே தொழில்துறை வளர்ச்சியில் மாவட்டம் 3–வது இடத்தை பிடித்துள்ளது என்று மின் வேதியியல் ஆய்வக நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன் கூறினார்.

Update: 2017-05-30 22:30 GMT

பனைக்குளம்

மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று மத்திய மின் வேதியியல் ஆய்வகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்வளர்ச்சி நிறுவனமும் இணைந்து தொழில் முனைவோர் திறன்வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மீன் பிடி படகுகளின் அடிப்பகுதி உப்புத்தண்ணீர், பாசி, நுண்ணுயிரிகளால் அரிமானம் எற்படுவதை தடுப்பது குறித்து பேசப்பட்டது. மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானி ராஜசேகரன் வரவேற்றார். மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் இயக்குனர் விஜயமோகனன் தலைமை வகித்தார். இதில் கலெக்டர் நடராஜன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:– வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசு பல்வேறு தொழில் உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரத்து 579 இளைஞர்களுக்கு இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12 ஆயிரத்து 115 இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 540 இளைஞர்களுக்கு கனரக வாகனங்கள் இயக்குவது, உழவு வாகனங்கள் இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன.

3–வது இடம்

மேலும் 600 மீனவ பெண்களுக்கு தையல் பயிற்சி, வண்ண மீன்கள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்து 679 இளைஞர்களுக்கு தொழில் செய்வதற்காக தொழில் முதலீட்டுத் தொகையாக அரசு சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டம் 3–வது இடத்தில் உள்ளது.

இதை தவிர மீனவர்களின் நலனுக்காக 103 கோடி மதிப்பில் மூக்கையூரில் பெரிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள மீனவர்கள் வசதிக்காக ரூ.60 கோடியில் குந்துகால் கடற்கரையில் பெரிய துறைமுகம் கட்டுப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 30 மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி கலெக்டர் நடராஜன் பாராட்டினார். தொடர்ந்து 2–வது கட்டமாக 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான 10 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமையும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட தொழில் முதலீடு மைய அதிகாரி மாரியம்மாள், மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் சுப்பிரமணியன், கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்