வேளாண்துறை அதிகாரிகள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

புதுவை வேளாண்துறை அதிகாரிகள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டுமென அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-05-30 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி வேளாண் பயிற்சி கூடத்தில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் விதை நெல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதற்கு உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அரசு செயலாளர் மணிகண்டன், இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் வேளாண் அதிகாரிகள், விதை நெல் உற்பத்தியாளர்கள், பாசிக் அதிகாரிகள், விதை நெல் சான்றளிப்பு அதிகாரிகள், நெல் விதை உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் கமலக்கண்ணன், செயலாளர் மணிகண்டன் ஆகியோரிடம் விதை உற்பத்தியாளர்கள் தங்களுடைய குறைகள், தேவைகளையும் தெரிவித்தனர். மேலும் அவர்கள், வேளாண் துறை அதிகாரிகள் மீதும் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் உடனடியாக விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் தங்களுடைய விளக்கங்களை தெரிவித்தனர்.

கடமையை உணர்ந்து...

கூட்டத்தில் கமலக்கண்ணன் பேசியதாவது:–

கடந்த காலங்களில் வேளாண்துறை அதிகாரிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு புதிய யுக்திகளை கொண்டு உற்பத்தியை பெருக்கினார்கள். அப்போது புதுவை மாநிலத்திற்கு நற்பெயர் கிடைத்தது. ஆனால் கடந்த ஒருவருடமாக வேளாண்துறை அதிகாரிகள் தங்களுடைய பணியை சரிவர செய்வதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். நாம் மிகவும் முக்கியமான துறையை கவனித்து வருகிறோம். எனவே அதிகாரிகள் தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். விதை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள குறைகள் படிப்படியாக சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்