ஆன்-லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு மருந்து கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன

ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் மற்றும் ஓட்டல்கள் நேற்று அடைக்கப்பட்டன.

Update: 2017-05-30 23:00 GMT
நெல்லை,

அகில இந்திய அளவில், ஆன்-லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்துகள் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய ‘இ-போர்ட்டல்” என்னும் எலக்ட்ரானிக் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உத்தேசித்து உள்ளது. இதை கண்டித்து அகில இந்திய அளவில் மருந்து வணிகர்கள் நேற்று ஒரு நாள் கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் மருந்து வணிகர்கள் கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் தெரு மற்றும் ரதவீதிகளில் உள்ள மொத்த மருந்து விற்பனை கடைகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒருசில கடைகள் பராமரிப்பு பணிகளுக்காக திறக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

1,200 கடைகள்...

இதுகுறித்து மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கருப்பையா கூறுகையில், “தற்போது மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டால், “நார்கோட்டிக்” எனப்படும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் ஆபத்தான மருந்துகளை அதிகளவு வாங்கி பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதை கண்டித்து மாவட்டம் முழுவதும் 1,200 மருந்து கடைகளும், 100 மொத்த மருந்துகள் விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன” என்றார்.

இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள மருந்து கடைகளுக்கு நேற்று ஏராளமானோர் வழக்கம் போல் மருந்து கடைகளுக்கு வந்தனர். ஆனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதே நேரத்தில் கூட்டுறவு மருந்து கடைகள், அம்மா மருந்தகம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்த மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. மேலும் மாலை 6 மணி முதல் அனைத்து மருந்து கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டன.

ஓட்டல்கள்...

இதே போல் ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வருகிற ஜூலை மாதம் முதல் வருமானத்துக்கு ஏற்ப பல மடங்கு உயர்த்தப்படுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தென் மாவட்டங்களில் நேற்று ஓட்டல்களை மூடி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டன. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டன. அந்த ஓட்டல்கள் முன்பு போராட்டம் காரணமாக ஓட்டல் மூடப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. தங்கும் விடுதிகளுடன் இணைந்த ஓட்டல்களில் , ஓட்டல்கள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தன. தங்கு விடுதிகளுக்கான வரவேற்பு அறை வழக்கம் போல் செயல்பட்டது.

அதே நேரத்தில் மற்ற இடங்களில் உள்ள ஓட்டல்கள், புரோட்டா கடைகள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் திறந்து இருந்தன. இதனால் இந்த கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்