மாணவர்களிடையே சாதிய உணர்வை போக்க வழிப்புணர்வு நடவடிக்கை

மாணவர்களிடையே சாதிய உணர்வை போக்க வழிப்புணர்வு நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தகவல்

Update: 2017-06-07 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களிடையே சாதிய உணர்வை போக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.

பேட்டி

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும், பொருட்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர, தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுஉள்ளதால் மாணவ–மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்லும் வழியில் எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையிலும், குறிப்பாக மாணவிகளுக்கு ராக்கிங் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் தனிப்படை அமைத்து சாதாரண உடையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்குமுன் நடைபெற்ற கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரை தவிர மற்ற 15 பேர் 18 வயதுக்குகீழ் உள்ளவர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி,கல்லூரி மாணவர்களாக உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது மாவட்டத்தில் உள்ள ஒரு சில மாணவர்களிடம் இன்றளவும் சாதிய உணர்வு மேலோங்கி உள்ளதும், அதன் ஆளுமை வெளிப்பாடுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதும் தெரியவந்துள்ளது.

முன்உதாரணம்

மாணவர்கள் தங்களிடம் உள்ள சாதிய உணர்வை வெளிப்படுத்த கையில் பட்டை அணிதல், கோ‌ஷங்கள் போடுதல், மனம்விட்டு பேசாமல் இருத்தல் உள்ளிட்டவைகளை அடையாளங்களாக பயன்படுத்துகின்றனர். மேலும், சாதிய அடிப்படையிலேயே நண்பர்களையும் உருவாக்கி கொள்கின்றனர். இது தவறான முன் உதாரணமாக உள்ளது. எனவே, பள்ளி,கல்லூரி பருவத்திலேயே இதுபோன்ற சாதிய உணர்வு மேலோங்கி இருப்பதை ஆரம்ப நிலையிலேயே மென்மையான போக்கின் மூலம் அகற்ற மாவட்ட போலீஸ் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது.

இதற்காக மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுஉள்ளோம். மாணவர்களிடம் அனைவரும் சமம், ஒற்றுமையாக வாழவேண்டும், கல்வி ஒன்றே குறிக்கோள் என்ற எண்ணத்தை விதைத்திடும் வகையில் அந்தந்த பகுதி போலீசார் மூலம் கலந்துரையாடல் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், பள்ளி,கல்லூரிகளில் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

நம்பிக்கை

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழு அமைத்து அந்த குழுவினர் சாதி, சமயமற்ற ஒருமித்த உணர்வை ஏற்படுத்த பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தி போலீஸ் அதிகாரிகள் மூலம் பரிசுகள், பாராட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளன. இதுபோன்ற தொடர் நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்டத்தை வளம்பெற செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்