ரூ.30 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் 2 பயணிகள் கைது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.30 லட்சம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-06-08 20:55 GMT
மங்களூரு,

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.30 லட்சம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து வந்த விமானம்


தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை துபாயில் இருந்து ஏர்-இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கவரித் துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த 2 பயணிகள் நடவடிக்கையில் சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் மங்களூருவை சேர்ந்த தீபக் இந்திரலால் கித்வானி, நிர்மல்தாஸ் லல்லானி ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் நூதன முறையில் தங்க கட்டிகளை துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

ரூ.30 லட்சம் தங்க கட்டிகள்

அதாவது, 2 பேரும் தங்களது ஆசன வாயில் தங்க கட்டிகளை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் இருந்தும் ஒரு கிலோ 247 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று சுங்கவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான 2 பேரையும் சுங்கவரித் துறை அதிகாரிகள், பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்