மொட்டையரசு உற்சவம் தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வந்தார்

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மொட்டையரசு உற்சவத்தில், முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்தார்.

Update: 2017-06-08 22:45 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. அன்று முதல் கடந்த 6-ந்தேதி வரை வசந்த உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 7-ந்தேதி காலையிலிருந்து மதியம் 2 மணி வரை இடைவிடாது வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று (8-ந்தேதி) மொட்டையரசு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிசாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம் நடந்தது.

பின்பு சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரை சாமி நகர் வலம் வந்தார். அதைத்தொடர்ந்து அங்கு தயாராக இருந்த தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு பொறியியற் கல்லூரி அருகே உள்ள மொட்டையரசு திடலுக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு மண்டபத்திலும் எழுந்தருளி, இரவு 8 மணி வரை மொட்டையரசு திடலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்பு, பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு இருப்பிடம் வந்தடைந்தார்.

பக்தர்கள் வேதனை

ஆண்டு தோறும் விசாக திருவிழாவிற்கு மறுநாள் மொட்டையரசு உற்சவம் நடைபெறும். இதையொட்டி கோவில் வாசல் முதல் சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரையிலுமாக சட்டத்தேரில் சாமி வலம் வருவார். இது பாரம்பரியமாக தொன்று தொட்டு நடைபெற்று வரும் வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு சட்டத்தேரில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இதை அறிந்த பக்தர்கள் வேதனையடைந்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்த வருடம் தவிர்க்க முடியாத காரணத்தால் சட்டத்தேர் பவனி நிறுத்தப்பட்டது. அடுத்த வருடம் வழக்கம் போல பாரம்பரிய முறைப்படி சட்டத்தேர் பவனி வரும் என்றார்.

மேலும் செய்திகள்