மன்னார் வளைகுடா கடலில் அதிக அளவில் மீன் பிடித்த பாம்பன் மீனவர்கள்

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடி தடை காலம் முடிந்து மீன் படிக்க சென்று எதிர் பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2017-06-16 22:15 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடி தடை காலம் முடிந்து மீன் படிக்க சென்று எதிர் பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென் கடல் பகுதியில் மீன் பிடிக்க பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் விசைப் படகுகளில் 100–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகை மீன்களுடன் கரைதிரும்பினார்கள். இதில் ஒவ்வொரு படகிலும் மாவுலா, விளை மீன், கிளி மீன், பாறை, கணவாய், நண்டு உள்ளிட்டவை அதிகஅளவில் பிடிபட்டு இருந்தன. மீனவர்கள் படகில் இருந்து அனைத்து மீன் களையும் பிளாஸ்டிக் கூடைகளில் கடற்கரையில் இறக்கி வைத்துனர்.தொடர்ந்து வியாபாரிகள் மூலம் அனைத்து மீன்களும் எடை போடப்பட்டு கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.இதில் ஒருசில படகில் மாவுலா மீன்களும், கணவாய் மீன்களும் அதிகஅளவில் பிடிபட்டு இருந்தன. தடை காலம் முடிந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு முதல் நாளாக மீன் பிடித்து கரை திரும்பிய ஒவ்வொரு படகிலும் சுமார் 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். தடை காலத்தையொட்டி கடந்த 2 மாதமாக ஏறுமுகமாக இருந்த மீன்களின் விலையானது தற்போது விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தொடங்கிவிட்டதால் ஓரிரு நாட்களில் அனைத்து வகை மீன்களின் விலையும் குறையத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்