நாராயணசாமியின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து கிரண்பெடி நடவடிக்கை புதுவை அரசியலில் பரபரப்பு

புதுவையில் அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தை ரத்து செய்து கவர்னர் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் புதுவை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-06-22 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி பார்வையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட புதுவை மாநில கவர்னர் பொறுப்பு வகிப்போருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அரசின் அன்றாட அலுவல்களில் தலையிடுவதுடன் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து வருகிறார். வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்து விமர்சித்து வருகிறார்.

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இருதரப்பினரும் டெல்லியில் முகாமிட்டு ஒருவர் மீது ஒருவர் புகார் பட்டியலும் வாசித்தனர்.

இதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் இவர்களது மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சவால் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

நிதி அதிகாரம் ரத்து

இந்தநிலையில் முதல்-அமைச்சருக்கு உள்ள நிதி அதிகாரத்தை ரத்து செய்து மத்திய அரசுக்கு கவர்னர் கிரண்பெடி பரிந்துரை செய்துள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி ரூ.50 கோடி வரை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் என்றால் மத்திய உள்துறையின் அனுமதியை பெற வேண்டும். முதல்-அமைச்சருக்கு ரூ.10 கோடி வரையிலும், துறைகளின் செயலாளர்களுக்கு ரூ.2 கோடி வரையிலும் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது.

இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முதல்-அமைச்சரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை நிதி அதிகாரம் இல்லாமல் இருந்த தலைமைச் செயலாளருக்கு ரூ.5 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை கவர்னர் வழங்கி உள்ளார். அரசு துறைகளின் செயலாளர்களுக்கான ரூ.2 கோடி வரையிலான நிதி ஒதுக்கீடு அதிகாரத்தையும் கவர்னர் ரத்து செய்துள்ளார்.

கிடப்பில் போடப்பட்டது

இதுதொடர்பாக கவர்னர் வெளியிட்டுள்ள தகவலில் மாநிலத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கு நானே முழு பொறுப்பு என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த உத்தரவு குறித்த அறிவிக்கையை வெளியிடுமாறு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்ட போதிலும் அதை தலைமை செயலாளர் செயல்படுத்தவில்லை. இது சரியான அணுகுமுறை இல்லை என்பதால் கவர்னரின் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தலைமை செயலாளர் அனுப்பி வைத்தார். கவர்னரின் உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தராத நிலையில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா அதற்கான கோப்பை கிடப்பில் போட்டார். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர்கிறது.

ஒரு ரூபாய் கூட ஒதுக்க முடியாது

நிதி அதிகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்தால் எந்த ஒரு திட்டத்திற்கும் முதல்- அமைச்சரால் ஒரு ரூபாய் கூட ஒதுக்க முடியாது. துறை செயலாளர் மூலம் ரூ.2 கோடி வரை செலவு செய்யும் உரிமையை அமைச்சர்களும் இழந்து விடுவர். கவர்னரே புதுவை மாநிலத்தின் முழு நிதிநிர்வாகத்தை கையில் எடுத்துக்கொள்வார். அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே எந்த ஒரு திட்டங்களையும் அரசால் செயல்படுத்த முடியும் நிலை உருவாகிவிடும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னருக்கு அதிகாரமா என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில் கவர்னரின் இந்த நடவடிக்கை புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்