நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டி அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு 5 பேர் கைது

ராசிபுரத்தில் செல்போனில் நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டி அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறித்த கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-22 23:15 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி.நகர் ரோடு எண்-6 பகுதியில் வசித்து வருபவர் கருணாநிதி (வயது 56). இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக வேலை செய்து வருகிறார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ராசிபுரம் அருகே உள்ள வையப்பமலையை சேர்ந்த தறித்தொழிலாளி புஷ்பராஜனின் மனைவி விஜயா (33) சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். அப்போது அரசு ஊழியரான கருணாநிதிக்கும், விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த விஜயா மருந்துகளை வாங்கிக்கொண்டு, தனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு நீங்கள்தான் உதவவேண்டும் எனவும் கருணாநிதியிடம் கூறினார். மேலும், இது தொடர்பாக பேச ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் ஏரிக்கரை அருகே வருமாறும் விஜயா அழைத்துள்ளார்.

நிர்வாணமாக படம் பிடித்தனர்

இதையடுத்து கருணாநிதி அன்று மாலை ஏரிக்கரைக்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த விஜயாவிடம் என்ன பிரச்சினை? என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது விஜயாவின் கணவர் புஷ்பராஜன், அவரது நண்பர்கள் தஸ்தகீர், சலீம், சந்திரசேகர் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, கருணாநிதியை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த படத்தை கருணாநிதியிடம் காட்டி ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்த படத்தை வாட்ஸ்-அப் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்துவோம். உனது வேலையை காலி செய்துவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன கருணாநிதி அன்றே அவர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

ரூ.5 லட்சம் பறிப்பு

பின்னர் தொடர்ந்து மிரட்டிய அந்த கும்பல், கடந்த 12-ந் தேதி ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தையும், 20-ந் தேதி ரூ.1 லட்சத்தையும், 21-ந் தேதி 80 ஆயிரமும் என மொத்தம் ரூ.5 லட்சத்தை கருணாநிதியிடம் இருந்து பறித்துக்கொண்டது. இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதுடன் கவுண்டம்பாளையம் ஏரிக்கரைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த கருணாநிதி இதுகுறித்து ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இந்த புகார் குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சுப்பிரமணி, மலர்விழி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

இதையடுத்து ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே நின்றிருந்த விஜயாவை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் வசிக்கும் தஸ்தீகர் வீட்டில் இருந்த புஷ்பராஜன், தஸ்தகீர் (65), அவருடைய மகன் சலீம் (38) மற்றும் பெரியமணலியைச் சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தார்கள்.

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும், ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் வைத்திருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான தஸ்தகீர் பழைய பூட்டுகளை பழுதுபார்க்கும் தொழிலாளி. அவருடைய மகன் சலீம் விசைத்தறி தொழிலாளி ஆவார்.

பெண்களை அரை நிர்வாணமாக்கி படம் பிடித்து பணம் பறிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் சூழ்நிலையில், அரசு ஊழியரை நிர்வாணமாக்கி பணம் பறித்தது ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்