ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை என பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

Update: 2017-06-22 21:00 GMT

தூத்துக்குடி,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை என பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாசன திட்டங்கள்

தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு 13 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் 200 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்றது. 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் 30 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்றது.

மழை பெய்யாத காலங்களில் கடுமையான வறட்சியும், மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையும் உள்ளது. மற்ற மாநிலங்களில் நீராதாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதேபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசும் எடுக்க வேண்டும்.

மோட்டார் சைக்கிள் பேரணி

பா.ம.க. சார்பில் தாமிரபரணியை பாதுகாப்போம். ஆற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பணைகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1, 2–ந் தேதிகளில் மோட்டார் சைக்கிள் பேரணி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. 1–ந் தேதி நெல்லையில் தொடங்கி 2–ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் முடிவடைகிறது. அன்று இரவு தூத்துக்குடி சிதம்பர நகரில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சி செய்கிறது. இதனை கைவிட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாடு அரசியலில் ஸ்திரதன்மை இல்லாமல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்