திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

திருவொற்றியூரில், கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி, வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-06-23 23:00 GMT
செங்குன்றம், 

சென்னை திருவல்லிக்கேணி சுனாமி குடியிருப்பு, 52-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய மகன்கள் சரத்குமார்(வயது 21), சூர்யா என்ற ஹேமந்த்குமார்(19). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த தங்கள் நண்பரான வெள்ளை பாபு(20) என்பவருடன் நேற்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் எண்ணூர் வந்தனர்.

பின்னர் 3 பேரும் மீண்டும் திருவல்லிக்கேணி திரும்பிச் சென்றனர். எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் அருகே சென்றபோது, முன்னால் 2 கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தன. அந்த லாரிகளுக்கு நடுவில் இவர்கள் செல்ல முயன்றனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி உரசியது. இதில் கன்டெய்னர் லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது அருகில் சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கிய சூர்யா, தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் வெள்ளைபாபு படுகாயம் அடைந்தார். நடுவில் அமர்ந்து பயணம் செய்த சரத்குமார், காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த உடன் கன்டெய்னர் லாரிகளை நிறுத்தி விட்டு 2 டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்