பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி

பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.;

Update:2017-07-07 03:30 IST

பெங்களூரு,

பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.

புறநகர் ரெயில் திட்டம்

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை மந்திரி சதானந்தகவுடா, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:–

பெங்களூருவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட சேவை முழுமையாக தொடங்கப்பட்டுள்ளதால் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் பெங்களூருவுக்கு புறநகர் ரெயில் திட்ட சேவை அவசியம் தேவை. முடிந்தவரை இந்த புறநகர் ரெயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஆரம்பத்தில் 15 மெமு ரெயில்கள் இயக்கப்படும். இதில் அதிக பயணிகள் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் நகரில் 40 சதவீத போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மத்திய–மாநில அரசுகள் மற்றும் ரெயில்வே துறை இணைந்து தீவிரமாக செயல்பட்டால் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும்.

இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.

சர்வதேச விமான நிலையத்திற்கு...

மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறுகையில், “தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ரெயில் வசதி ஏற்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. யஷ்வந்தபுரத்தில் இருந்து எலகங்கா வழியாக விமான நிலையத்திற்கு இணைப்பு வழங்க முடியும். ரெயில்வே துறை முன்வந்தால் இதுகுறித்து ஆய்வு நடத்த மாநில அரசு தயாராக உள்ளது. பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்ட சேவை விரைவில் தொடங்கப்படும். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் மாநில அரசின் குழுவினர் டெல்லி சென்று ரெயில்வே துறை மந்திரி சுரேஷ்பிரபுவை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தை தொடங்குவதற்காக ஒரு அதிகாரிகள் குழுவை அமைப்பது குறித்த ஒரு திட்ட அறிக்கையும் ஏற்கனவே ரெயில்வே துறைக்கு அனுப்பியுள்ளோம்“ என்றார்.

மேலும் செய்திகள்