ஐதராபாத்தில் கடத்தப்பட்ட தம்பதி திருவண்ணாமலையில் மீட்பு
ஐதராபாத்தில் கடத்தப்பட்ட தம்பதி திருவண்ணாமலையில் மீட்கப்பட்டனர்.;
திருவண்ணாமலை,
ஐதராபாத்தில் கடத்தப்பட்ட தம்பதி திருவண்ணாமலையில் மீட்கப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்கென்டி. இவரது மனைவி கிரண்கென்டி (வயது 44). இவர்கள் இருவரும் மென்பொருள் பொறியாளர்கள். இவர்கள் கடந்த மாதம் ஜதராபாத்தில் உள்ள யோகா பயிற்சி மையத்திற்கு சென்றனர். அங்கு உஷாஸ்ரீ நம்மி (42), ஸ்ரீகாந்த்ரெட்டி (46) ஆகியோர் பயிற்சியாளர்களாக இருந்தனர். இவர்கள் கிரண்கென்டிக்கு போதை பொருள் கொடுத்து அடிமையாக்கி உள்ளனர். இதனால் கிரண்கென்டி, யோகா பயிற்சியாளர்கள் சொல்வதை கேட்டு நடந்துள்ளார். இவரது செயல்பாட்டை அவரது குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி யோகா பயிற்சியாளர்கள் உஷாஸ்ரீநம்மியும், ஸ்ரீகாந்த்ரெட்டியும் சேர்ந்து கிரண்கென்டிக்கு சாமியார் போன்று கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்து தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு அழைத்து சென்று உள்ளனர். ஜெகதீஷ்கென்டியும், அவரது மனைவியுடன் சென்றுள்ளார்.
யோகா பயிற்சியாளர்கள் முதலில் ஜெகதீஷ்கென்டி தம்பதியிடம் இருந்து 20 பவுன் நகையை ஏமாற்றி வாங்கியுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் வந்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் மாலை யோகா பயிற்சியாளர்கள் மீண்டும் அந்த தம்பதியிடம் இருந்து இணையதளம் மூலம் ரூ.2 லட்சம் பணம் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இதற்கிடையில் 2–ந் தேதியில் இருந்து கிரண்கென்டியும், ஜெகதீஷ்கென்டியும் காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கிரண்கென்டியின் சகோதரி கணவர் மன்தாபாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் உள்ள மாதாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாதாப்பூர் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்த கிரண்கென்டி, ஜெகதீஷ்கென்டி உள்பட 4 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதற்கிடையில் கிரண்கென்டியையும், ஜெகதீஷ்கென்டியையும் தெலுங்கானா போலீசார் கடத்தல் வழக்கு தொடர்பாக தேடி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் போலீஸ் நிலைத்தில் தங்க வைக்கப்பட்டனர். நள்ளிரவில் கண்விழித்த கிரண்கென்டி, ‘நான் எங்கு இருக்கிறேன், இங்கு எப்படி வந்தேன், நான் எதற்கு ருத்ராட்சை மாலை எல்லாம் அணிந்து இருக்கிறேன்’ என்று பல்வேறு கேள்விகளை அவரது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது தான் அவர்கள் ஏமாற்றபட்டு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து கிரண்கென்டி ஐதராபாத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து அவர்கள் மாதாப்பூர் போலீசாருடன் திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தனர். பின்னர் திருவண்ணாமலை போலீசார் தம்பதி மற்றும் யோகா பயிற்சியாளர்கள் உஷாஸ்ரீநம்மி, ஸ்ரீகாந்த்ரெட்டி ஆகியோரை தெலுங்கானா மாதாப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.