விபத்தில் விவசாயிகள் 2 பேர் சாவு: டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி மறியல்

விபத்தில் விவசாயிகள் 2 பேர் பலியான சம்பவத்தில் டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2017-07-24 00:30 GMT
பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 46) அதே பகுதியை சேர்ந்தவர் வாசு (40). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விவசாய பொருட்களை வாங்குவதற்காக பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களது மோட்டார் சைக்கிள் லிங்கபையன்பேட்டை கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு டிராக்டர் விவசாயிகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர், டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும். பலியானவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும்பேடு, கம்மார்பாளையம், ஏறுசிவன் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னேரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அதை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்