2 மாதமாக குடிநீர் வராததால் கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

2 மாதமாக குடிநீர் வராததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-08-07 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ளது நடுவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ளது நாட்டரசன்கோட்டை கிராமம். இங்கு 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் தேக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் நேற்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரவிதங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து பொது மக்கள் 4 பேரை மட்டும் கலெக்டரிடம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீருக்காக அருகில் உள்ள வயல்களில் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பிடித்து வருகிறோம். இதனால் வெகுதூரம் செல்ல வேண்டியது உள்ளது. எங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர். 

மேலும் செய்திகள்