உடன்குடியில், நூதன முறையில் லோடு ஆட்டோவை கடத்திய தொழிலாளி கைது

உடன்குடியில், நூதன முறையில் லோடு ஆட்டோவை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-08 20:30 GMT

உடன்குடி,

உடன்குடியில், நூதன முறையில் லோடு ஆட்டோவை கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

லோடு ஆட்டோ

திருப்பூர் மாவட்டம் அவினாசி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 50). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் மகன் அந்தோணிராஜா (32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 4–ந்தேதி வேலை தேடி, அவினாசிக்கு சென்றார். அங்கு எந்த வேலையும் கிடைக்காததால், லோடு ஆட்டோவை கடத்தி செல்ல திட்டமிட்டார்.

அதன்படி, தண்டாயுதபாணியிடம் தனது மாமனாரின் வீடு உடன்குடியில் உள்ளது. அங்குள்ள பொருட்களை லோடு ஆட்டோவில் ஏற்றி அவினாசிக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதனை உண்மை என்று நம்பிய அவர், தனது லோடு ஆட்டோவில் அந்தோணிராஜாவை ஏற்றி கொண்டு உடன்குடிக்கு புறப்பட்டார். அப்போது தண்டாயுதபாணி தன்னுடைய நண்பரான நாகராஜ் மகன் நந்தகுமாரையும் (28) அழைத்து சென்றார்.

கடத்தல்

மறுநாள் காலையில், அவர்கள் 3 பேரும் லோடு ஆட்டோவில் உடன்குடிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் உடன்குடி மெயின் பஜாரில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது வேகமாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்த அந்தோணிராஜா, அங்கு நிறுத்தி இருந்த லோடு ஆட்டோவை கடத்தி சென்றார். சிறிதுநேரத்தில் ஓட்டலில் இருந்து வெளியே வந்த தண்டாயுதபாணி, நந்தகுமார் ஆகிய 2 பேரும் அந்தோணிராஜா லோடு ஆட்டோவை கடத்தி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொழிலாளி கைது

இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் உடன்குடி– செட்டியாபத்து ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்தபோது, அந்த வழியாக லோடு ஆட்டோவில் வந்த அந்தோணி ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி சென்ற லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அந்தோணி ராஜாவை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்