பூந்தமல்லி அருகே வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்ததால் அவரை கொலை செய்தோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2017-08-08 23:30 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் மவுண்ட் பூந்தமல்லி சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் கடந்த 25–ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம், கால் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் துப்பு துலக்க பூந்தமல்லி உதவி கமி‌ஷனர் ஆல்பிரட் வில்சன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் அவர் பின் தலையில் அடிபட்டு இறந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலைபார்த்து வந்த அரிக்குமார் (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் மேற்குவங்கத்தை சேர்ந்த பிரதீப் (30) என்பதும், இவர் அம்பத்தூரில் உள்ள மிளகாய்த்தூள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தததும், குடிபோதையில், அவரது நண்பர்களான ராஜூகின்கு (25), முகின் அன்சாரி (24) ஆகியோருடன் சேர்ந்து பிரதீப்பை கொலை செய்ததாகவும் அரிக்குமார் தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் மேற்குவங்கம் சென்று ராஜூன்கின்கு, முகின் அன்சாரி ஆகியோரை பிடித்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:–

மது அருந்துவதற்காக அடிக்கடி பிரதீப் காட்டுப்பாக்கம் வருவார். போதை அதிகமானால் நண்பர்களுக்கு தொல்லை கொடுத்து தகராறு செய்வார். சம்பவத்தன்றும் காட்டுப்பாக்கம் வந்த அவர் கட்டுமான பணிகள் நடக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 2–வது தளத்தில் ராஜூகின்கு, முகின் அன்சாரி, அரிக்குமார் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.

போதை தலைக்கேறியதும் பிரதீப் வழக்கம் போல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அரிக்குமார், பிரதீப்பை மாடியில் இருந்து தள்ளி விட்டார். இதில் பின் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் பதறிப்போன அரிக்குமார், போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம், அதனால் அவர் சாலை விபத்தில் இறந்ததாக போலீசார் நம்பவேண்டும் என்றால் பிரதீப்பின் உடலை சிறிது தூரம் கொண்டு போய் போட்டுவிடலாம் என நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள், உடலை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள காலி இடத்தில் போட்டனர்.

பின்னர் பலகைகள் மீது சிமெண்டு கலவை ஒட்டாமல் இருக்க பூசப்படும் கருப்பு நிற ஆயிலை முகம், கால் பகுதிகளில் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். இதில், பிரதீப் முகம் எரிந்து அடையாளம் தெரியாமல் எலும்புக்கூடானது. அதன்பிறகு ராஜூகின்கு, முகின் அன்சாரி ஆகிய 2 பேரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அரிக்குமார், ராஜூகின்கு, முகின் அன்சாரி ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்