மீனவர் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மீனவர் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2017-08-08 22:30 GMT

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் பாஸ்கர் என்ற பூபாலன் (வயது 19). மீனவர். இவர் கடந்த 27–1–2009 அன்று தனது அண்ணன் திருப்பதி, உறவினர் சுகுமார் ஆகியோருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இவர் மீன் வலையை விரித்தபோது வடநெம்மேலி மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (37), மோகன் (36), வடிவேல் (44), மேகநாதன் (34), ஞானவேல் (34), கிருஷ்ணன் (64), குப்பன் (64) ஆகியோரும் மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் பாஸ்கரிடம் சென்று நாங்கள் மீன் பிடிக்கும் பகுதியில் நீங்கள் எப்படி மீன் பிடிக்கலாம் என்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாஸ்கரை அடித்து கடலில் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர்.

இது குறித்து மாமல்லபுரம் போலீசார் மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கின் தீர்ப்பில் ரமேஷ் மற்றும் மோகன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும் தலா ரூ.7ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வடிவேல், மேகநாதன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கிருஷ்ணன், குப்பன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஞானவேல் என்பவர் வழக்கு விசாரணை நடந்து வரும்போதே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்