மும்பை மாநகராட்சி திறந்து விடும் கழிவுநீரால் கடல் மாசுப்படுகிறது

மும்பை மாநகராட்சி திறந்து விடும் கழிவுநீரால் கடல் மாசுப்படுவதாக சட்டசபையில் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-08-12 21:40 GMT

மும்பை,

மராட்டிய சட்டசபை மற்றும் மேல்–சபை கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் குறித்த 2016 மார்ச் 31–ந் தேதி வரையிலான மத்திய கணக்கு தணிக்கையின் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மும்பை மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை மாநகராட்சி கழிவுநீரை மாசு நீக்கி கடலில் விட வேண்டும். ஆனால் 49 சதவீத கழிவுநீர் மாசு நீக்கப்படாமலேயே கடல் மற்றும் கழிமுகங்களில் திறந்து விடப்படுகின்றன. அதாவது மும்பையில் தினமும் 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. இதில் 1,098 மில்லியன் லிட்டர் கழிவு நீர் மாசு நீக்கப்படாமலேயே கடலில் திறந்து விடப்படுவதாக தெரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடல் நீரில் கலக்கும் மாசுவின் அளவு அதிகரித்து உள்ளது. இதன் மூலம் மாநகராட்சியின் கழிவுநீர் மேலாண்மை நிர்வாகம் திறனற்று இருப்பதை காட்டுகிறது.

குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்திற்காக மும்பை மாநகராட்சி தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான திட்டத்தை தயாரிக்கவில்லை. இது தொடர்பான பணிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமல்படுத்தப்படவில்லை.

மாநில போலீஸ் துறைக்கு வழங்கப்பட வேண்டிய நவீன எந்திரங்களில் தட்டுப்பாடு உள்ளது. அதன்படி 65 ஆயிரம் நவீன எந்திரங்கள் இன்னும் வழங்கப்பட வேண்டியது உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்