திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலக அதிகாரி மனைவியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

மதுரையில் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலக அதிகாரி மனைவியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை.

Update: 2017-08-16 22:15 GMT

மதுரை,

மதுரை சிந்தாமணி, கண்ணன் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன், மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 52). நேற்று காலை ராஜேஸ்வரி மட்டும் மாடி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் உங்கள் மகனின் நண்பர்கள் என்று அறிமுகம் ஆகி உள்ளனர்.

அப்போது ராஜேஸ்வரி தனது மகன் வந்த பிறகு வீட்டிற்கு வருமாறு கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த வாலிபர்கள் தங்களுக்கு தாகமாக இருப்பதால் தண்ணீர் கொடுக்குமாறு கூறினார்கள். எனவே ராஜேஸ்வரி கதவை திறந்து விட்டு, சமையல் அறைக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அந்த நேரத்தில் அவரை பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் திடீரென்று ராஜேஸ்வரியின் வாயை துணியால் பொத்தி, கைகளை கயிற்றால் கட்டினார்கள்.

கழுத்தில் கிடந்த மற்றும் பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகைகளை எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். சில மணி நேரம் கழித்து ராஜேஸ்வரி தனது கைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, கணவர் ராஜசேகரனுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.

அவர் இது குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப் போட்டு நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்