பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக்கொலை கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சியில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-16 23:15 GMT
திருச்சி,

திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார். ரெயில்வேயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி சாந்தி. இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் கார்த்திகேயன் (வயது17). இவர் பொன்மலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் தனது நண்பர்களுடன் அவர் விளையாடிக்கொண்டு இருந்தார். பின்னர் நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொன்மலை ரெயில்வே கேட் அருகே கார்த்திகேயன் மார்பில் கத்தியால் குத்துப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து சாந்தியிடம் கூறினர். இதையடுத்து அலறியடித்துக்கொண்டு அங்கு சென்ற சாந்தி மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்ற கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கார்த்திகேயனுக்கு சீனிவாசன் என்ற தம்பி உள்ளார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த அவரிடம் கொலை சம்பவம் குறித்து கேட்டபோது, எனது அண்ணனை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார். எதற்காக கொலை செய்தார் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டு, கார்த்திகேயனின் உடலை பார்த்து அவர் அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்நிலையில் கார்த்திகேயனை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வாலிபரின் வீட்டை, கார்த்திகேயனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்