கன்னடியன் கால்வாயில் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

கன்னடியன் கால்வாயில் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2017-08-22 00:00 GMT

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேரன்மாதேவி வட்டார குழு தலைவர் ராஜன் தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘சேரன்மாதேவி வட்டார பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த பகுதியில் கன்னடியன் கால்வாய் பா£சனத்தை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கன்னடியன் கால்வாயில் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

விவசாய சங்க மானூர் ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘பருவமழை பொய்த்து விட்டதால் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிவிட்டன. பயிர் காப்பீட்டு தொகைக்காக பிரிமிய தொகை செலுத்தி இருந்தோம். ஆனால் எங்களுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. எங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் கோதர்முகைதீன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, இளைஞர் அணி செயலாளர் கடாபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘அங்கன்வாடி பணியாளர்கள் 1,600–க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக நெல்லை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 22 இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் பாதி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் இல்லையென்றால் அதில் பாதி வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் உரிய இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

நெல்லை மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நாகம்மாள் மாரியப்பன் தலைமையில் கொடுத்த மனுவில், ‘மத்தளம்பாறை, ஆயிரம்பேரி, ஆசாத்நகர் ஆகிய ஊர்களில் விண்ணப்பித்த 36 பேருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

பாளையங்கோட்டையை அடுத்த நொச்சிகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் உள்ள கழிப்பறையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை மீட்டு தர வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

நாங்குநேரி அருகே உள்ள அ.சாத்தான்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊருக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை 3, 4–வது வார்டு பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் ஒரு ஆண்டாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. தற்போது கிணற்றிலும் தண்ணீர் இல்லை. ஒரு குடம் ரூ.10 என கட்டணம் கொடுத்து தண்ணீர் வாங்கி வருகிறோம். எங்கள் ஊருக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மானூரை அடுத்த அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு இல்லை. எனவே மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணியை அடுத்த சின்னதம்பி நாடார்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் ஊரில் புதிய டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்து வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறந்தால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த மாரிப்பாண்டியன் கொடுத்த மனுவில், ‘நெல்லையை அடுத்த ராமையன்பட்டி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்து வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையும் மீறி புதிய கடை திறக்க முயற்சி நடக்கிறது. எனவே புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகரை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்த வில்லிசை கலைஞர் சங்கீத வேலப்பன், கடந்த ஜூன் மாதம் 12–ந்தேதி தனது வீட்டில் இருந்து 10 பவுன் நகை கொள்ளை போய் உள்ளதாகவும், அந்த நகையை மீட்டு தரும்படியும் மனு கொடுத்தார்.

கீழப்பாவூர் யூனியன் அடைக்கலப்பட்டணம் கீழத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஆதி தமிழர் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வேதம்புதூரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்த பாண்டி மனைவி பிரேமா (வயது 40) என்பவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டரிடம் மனு கொடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் தனது பையில் வைத்திருந்த விஷபாட்டிலை எடுத்து குடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பிரேமா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எனது கணவரை பிரிந்து 2 மகன்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். அங்கன்வாடி பணிக்காக விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் கேட்டு இருந்தேன். எனது ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரம் என கொடுத்து இருந்தேன். ஆனால் வருவாய்த்துறையினர் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் என சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதனால் என்னால் வேலைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. எனது வருமான சான்றிதழை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மகளிர் அமைப்பு சார்பில் ‘இந்தியாவை அடித்து கொல்லாதே‘ என்ற தலைப்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அந்த அமைப்பு நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இருந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார், பெண்களை கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே கையெழுத்து இயக்கம் நடத்துமாறு கூறி வெளியேற்றினர். இதை கேள்விப்பட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் அமைப்பு செயலாளர் சுரேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கையெழுத்து இயக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்