விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் : இந்து அமைப்புகள் வெளிநடப்பு

ஆம்பூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-21 23:37 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் மீராபென்காந்தி தலைமையில் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் அசேன்ஷெரிப், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கூட்டத்தில் பா.ஜ.க. நகர தலைவர் அண்ணாதுரை, இந்து முன்னணியை சேர்ந்த ரவிசங்கர், தி.மு.க.வை சேர்ந்த லட்சுமிகாந்தன், விஜயபாரத மக்கள் கட்சி ஹரிகிருஷ்ணன், வீரவிக்னேஸ்வர் விழாக்கமிட்டி ராம.சீனிவாசன், விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் விஜயகுமார் மற்றும் கே.எம்.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது முதல் அதனை கொண்டு சென்று கரைப்பது வரையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு, இந்து முன்னணி நிர்வாகியை மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் கூட்டத்திற்கு வந்த ராம.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரது பேச்சை கண்டித்து ஆலோசனைக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து வருவாய்துறையினர் அவர்களை சமாதானம் செய்து கூட்டத்திற்கு அழைத்து வந்தபின் கூட்டம் நடந்தது.

இதையடுத்து த.மு.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் த.மு.மு.க. நகர செயலாளர் தப்ரேஸ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் நபீஸ்அரஸமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்